கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 வகையான நிவாரண பொருட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 வகையான நிவாரண பொருட்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

Update: 2018-12-07 23:00 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை அகரப்பட்டியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண பொருட்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கஜா புயலால் பல்வேறு மாவட்டங்கள் மிகுந்த பாதிப்படைந்து உள்ளன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் கஜா புயலால் முழுவதுமாக சேதமடைந்து உள்ளது. சேத பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால அடிப்படையிலான பணிகளின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 800 மதிப்பில் 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதில் அரிசி, பால் பவுடர், போர்வை, துவரம்பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், புளி, உப்பு, ரவை, நாப்கின், கொசுவர்த்தி, வேட்டி, சேலை, துண்டுகள், நைட்டி, குடை உள்ளிட்ட 27 வகையான பொருட்கள் உள்ளன.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. எனவே பொதுமக்கள் தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுனில் பாலிவால், கலெக்டர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்