குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-07 22:45 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற பெயரில் கட்டிடங்கள் கடந்த 2001-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதில் தற்போது 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமத்துவபுரம் தொடங்கப்பட்டபோது, அதில் விளையாட்டு மைதானத்திற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் அரசு சார்பில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு, தற்போது திறக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சமத்துவபுரத்தில் விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது பெரம்பலூர் நகராட்சி சார்பில் நகர் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக்களை பிரிப்பதற்காக குப்பை கிடங்கு அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் அந்த இடத்தினை பெரம்பலூர் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் குப்பை கிடங்கு அமைப்பதற்கான பணிகளை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனை கண்ட சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என்றும், அமைத்தால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகள் அவர்களை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சமத்துவபுரம் மக்கள் பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி முன்பு ஒன்று கூடினர். சமத்துவபுரத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் நகராட்சி முடிவை கண்டித்து பள்ளி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றனர். ஆனாலும் அவர்கள் மறியலை கைவிடாமல் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத் சம்பவ இடத்துக்கு சிறிது நேரம் கழித்து வந்தார். இதனை கண்ட மக்கள் ஆவேசத்துடன் எழுந்து வந்து ஆணையர் வினோத்திடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். சமத்துவபுரத்தில் குப்பை கிடங்கு அமைப்பதா, வேண்டாமா என்று மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தீர்வு காணப்படும் என நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் 1 மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப் படுத்தினர்.

மேலும் செய்திகள்