கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது.

Update: 2018-12-07 22:56 GMT
கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி வெளியூர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இங்கு கடலின் நடுவே உள்ள பாறைகளில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்றவை அமைந்துள்ளன. இவற்றுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை பெருக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பொழுதுபோக்கு வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கன்னியாகுமரியில் ரோப் கார் திட்டத்தை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழக அரசுடன் இணைந்து செயல் படுத்த உள்ளது. காமராஜர் மணிமண்டபத்தின் பின் பகுதியில் உள்ள கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை 800 மீட்டர் நீளத்திற்கு இந்த ரோப் கார் வசதி செய்யப்படுகி றது. கடல் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் உயரத்தில் இது அமைகிறது.

இதற்கான சர்வே பணியில் நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அதிநவீன சாட்டிலைட் கேமரா உதவியுடன் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் ஆய்வு நடந்தது. தொடர்ந்து சில நாட்கள் இந்த பணிகள் நடைபெற உள்ளது.


மேலும் செய்திகள்