டெல்டா பாசனத்துக்காக கல்லணைக்கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறப்பு

டெல்டா பாசனத்துக்காக கல்லணைக்கால்வாயில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2018-12-08 22:30 GMT
தஞ்சாவூர்,


காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12–ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 19–ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து 22–ந் தேதி அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 1–ந் தேதி தொடங்கியது. தஞ்சை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.


இந்த நிலையில் கஜா புயல் காரணமாக டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. கடந்த மாதம் 11–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை 500 கன அடி முதல் 1,000 கன அடி வீதம் மட்டும் திறக்கப்பட்டது. இதனால் கல்லணைக்கு குறைவான தண்ணீர் வந்தது. அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கஜா புயலின்போது மழை பெய்ததாலும், அதன்பின்னர் தொடர்ந்து பரவலாக மழை பெய்ததாலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவோணம் பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. அப்படி தேங்கியிருந்த மழை தண்ணீர் வடிந்ததுடன், கல்லணைக்கால்வாயின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டது.

கஜா புயல் பாதிப்பில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக இயல்புநிலை திரும்பி வருவதால் கடந்த 29–ந் தேதிக்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. கடந்த 3–ந் தேதி முதல் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.


இதனால் கல்லணைக்கால்வாய்க்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது. இதனால் கல்லணையில் இருந்து நேற்று காவிரியில் 501 கன அடியும், வெண்ணாற்றில் 101 கன அடியும், கல்லணைக்கால்வாயில் 2,513 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணைக்கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றதை பார்த்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்