கம்மியம்பேட்டை, பச்சையாங்குப்பம் கிடங்கில் உள்ள குப்பைகளை நவீன முறையில் அகற்ற ரூ.6¾ கோடி ஒதுக்கீடு

கம்மியம்பேட்டை, பச்சையாங்குப்பத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்குகளில்ல் உள்ள குப்பைகளை நவீன முறையில் பிரித்து அகற்றுவதற்கு 6¾ கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-12-08 22:30 GMT
கடலூர், 

கடலூர் நகராட்சியில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் பச்சையாங்குப்பம் மற்றும் கம்மியம்பேட்டையில் உள்ள குப்பைக்கிடங்குகளில் கொட்டப்பட்டன. இதனால் இவ்விருகுப்பைக்கிடங்குகளிலும் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

கம்மியம்பேட்டை குப்பைக்கிடங்கில் 6.10 ஏக்கர் பரப்பளவில் 75 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பச்சையாங்குப்பத்தில் 2.30 ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு குப்பைகள் குவிந்து உள்ளன.

இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. இதற்கிடையே அவ்வப்போது குப்பைகளை தீயிட்டுகொளுத்தி விடுவதால் ஏற்படும் புகை மூட்டத்தாலும் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ‘பயோ மைனிங்’ என்ற நவீன முறையில் இரு குப்பைக்கிடங்குகளிலும் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கான திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்து உள்ளது. இத்திட்டத்தின் படி நவீன எந்திரங்கள் மூலம் குப்பைகள் பிரித்து அகற்றப்படும். அதன்பிறகு இரு இடங்களிலும் குப்பைக்கிடங்குகள் இருக்காது. இத்திட்டத்துக்கு ரூ.6 கோடியே 71 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிதியை நகராட்சிக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான தொழில்நுட்ப உதவி பெறுவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தை நகராட்சி நிர்வாகம் நாடி இருந்தது. அதையடுத்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குரியன்ஜோசப் நேற்று சென்னையில் இருந்து கடலூருக்கு நேரில் வந்து இரு குப்பைக்கிடங்குகளையும் பார்வையிட்டு தொழில்நுட்ப ஆலோசனைகளை கூறி விட்டு சென்றார். இந்த ஆய்வின் போது நகராட்சி உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்