புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அஞ்செட்டி தாலுகாவை, முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார் கலெக்டர் பிரபாகர் தகவல்

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அஞ்செட்டி தாலுகாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்கிறார் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

Update: 2018-12-08 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி ஊராட்சியில் தனியார் நிறுவன உதவியுடன் நல்லான் சக்கரவர்த்தி ஏரி தூர்வாரப்பட்டு ஏரியின் கரைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதையொட்டி ஏரி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், பசுமை பராமரிப்பு குழு தலைவர் தாமஸ், ஏரிகள் பராமரிப்பு குழு தலைவர் லட்சுமணன், தனியார் நிறுவன அதிகாரி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

தமிழக அரசும், தமிழக முதல்-அமைச்சரும் நிலத்தடி நீர் உயரும் வகையில் ஏரிகளை தூர்வாரி செம்மைபடுத்த உத்தரவிட்டத்தின் அடிப்படையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாய நிலத்திற்கு விவசாயிகள் வண்டல் மண் எடுத்து விளை நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் அடங்கல் மற்றும் சிட்டா ஆகியவற்றை சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் வழங்கி விவசாயத்திற்கு வண்டல் மண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கரையை கூடுதலாக உயர்த்தி அமைக்கவும், ஏரியை சுற்றி அமைத்துள்ள சாலையை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏரியிலிருந்து மண்ணை செம்மைப்படுத்தும் பணிகளுக்கு பொக்லைன் எந்திரம் பயன்படுத்த இலவசமாக செய்து தரப்படும். இதனால் இப்பகுதியில் நிலத்தடிநீர் உயர்வதோடு மட்டு மல்லாமல் மக்களுக்கும் பறவைகளுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பாக நீர்நிலைகள் தூர்்வாரும் பணிகள் நடைபெற்ற வருகிறது. நீர்வரத்து வாய்கால்களின் 4 இடத்தில் பாலம் அமைக்க கேட்டுள்ளர்கள். அந்த 4 இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக நிதி வழங்கி அனுமதி பெற்று பணியை விரைவில் தொடங்கப்படும்.

மேலும் தமிழக அரசானது அஞ்செட்டியை தாலுகாவாக அறிவித்துள்ளது. அதற்காக தாலுகா இயங்குவதற்கு தற்காலிக இடமும், புதிய அலுவலகத்திற்கு இடமும் தேர்வு செய்யும் பணிகள் மேற்கொண்டு வருகிறது. விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஏரிக்கரை அருகில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவிசெயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழரசன், தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார் பாரி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள், விவசாய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்