சபரிமலை, அயோத்தி பிரச்சினையில் பா.ஜனதா அரசியல் செய்கிறது தேவேகவுடா கடும் தாக்கு

சபரிமலை, அயோத்தி பிரச்சினையில் பா.ஜனதா அரசியல் செய்வதாக தேவேகவுடா கடுமையாக தாக்கி பேசினார்.

Update: 2018-12-08 22:30 GMT
ஹாசன், 

சபரிமலை, அயோத்தி பிரச்சினையில் பா.ஜனதா அரசியல் செய்வதாக தேவேகவுடா கடுமையாக தாக்கி பேசினார்.

ராஜஸ்தானில் காங். வெற்றி

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான எச்.டி.தேவேகவுடா நேற்று காலை தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு (2019) நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் ெவற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இன்னும் சில நாட்களில் டெல்லியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்.

அரசியல் செய்கிறது

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 5 ஆண்டுகள் பா.ஜனதா கட்சி தான் ஆட்சியில் உள்ளது. இவ்வளவு நாட்கள் எழாத பிரச்சினை தற்போது எழுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பா.ஜனதா ராமர் கோவில் பிரச்சினையை தூண்டுகிறது. அதுமட்டுமல்லாமல் பா.ஜனதாவினர் தென்இந்தியாவில் சபரிமலையை வைத்தும், வடஇந்தியாவில் ராமர் கோவிலை வைத்தும் அரசியல் செய்கிறார்கள்.

பா.ஜனதாவின் நடவடிக்கையை அந்த கட்சியை சேர்ந்தவர்களே விமர்சிக்கிறார்கள். உயர் மதிப்புக்கொண்ட ரூபாய் நோட்டை ரத்து செய்தபோது, ரிசர்வ் வங்கியே எதிர்ப்பு தெரிவித்தது. 5 ஆண்டுகளில் பா.ஜனதா மக்களுக்காக எதையும் செய்யவில்லை. 5 ஆண்டுகளில் மோடி என்ன சாதனை செய்தார்?.

ரூ.50 கோடி நிவாரணம்

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் இதனை பொறுக்க முடியாமல், பா.ஜனதாவினர் எப்போதும் அரசை குற்றம்சாட்டுவதையே முக்கிய வேலையாக வைத்துள்ளனர். 104 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சியை பிடிக்க முடியவில்லையே என அவர்கள் ஆதங்கப்பட்டு, கூட்டணி ஆட்சி மீது பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். முதல்-மந்திரி குமாரசாமி ஹாசன், மண்டியா மாவட்டங்களுக்கு மட்டுமே பணியாற்றுவதாக கூறுவது தவறு. அவர் மாநிலத்துக்காக உழைத்து வருகிறார்.

கர்நாடக விவசாயிகளின் கடனை தான் குமாரசாமி தள்ளுபடி செய்துள்ளார். ராமநகர், மண்டியா, ஹாசன் மாவட்ட விவசாயிகளின் கடன்களை மட்டும் அவர் தள்ளுபடி செய்யவில்லை. நான் பிரதமராக இருந்தபோது உருளை கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் அந்த விவசாயிகளுக்கு ரூ.50 கோடி நிவாரணம் கொடுத்தேன்.

நிரந்தர தீர்வு

கர்நாடகத்தில் ஹாசன், குடகு உள்ளிட்ட பல மாவட்டங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க முதல்-மந்திரி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கூடிய விரைவில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹாசனில் இருந்து பேளூருக்கு ரெயில் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பேளூருக்கு ரெயில் விடுவதன் மூலம் அங்குள்ள சுற்றுலா தலம் வளர்ச்சி அடையும். முன்னாள் பிரதமரான எனது மாவட்டத்துக்கு மத்திய மந்திரிகள் நல்ல வளர்ச்சி பணிகளை செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்