பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்குள் இறைச்சி வாகனத்தில் கைதிகளுக்கு கடத்திய 6 செல்போன்கள் பறிமுதல்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை கைதி களுக்கு இறைச்சி வாகனத்தில் கடத்திய 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-12-08 22:00 GMT
பெங்களூரு, 

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை கைதி களுக்கு இறைச்சி வாகனத்தில் கடத்திய 6 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இறைச்சி ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் அதிகாரிகள் சோதனை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி களுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அசைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. அசைவ உணவு சமைக்க தேவையான இறைச்சியை சாம்ராஜ் பேட்டையை சேர்ந்த ஒப்பந்ததாரரான சுரேஷ்பாபு என்பவர் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக வழங்கி வருகிறார். அதன்படி, சம்பவத்தன்று அவர் மினி வேனில் இறைச்சியை வைத்து கொண்டு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார்.

சிறையின் முதல் நுழைவு வாயிலில் மினி வேனை பரிசோதனை செய்யாமல், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்கள் உள்ளே செல்ல அனுமதி அளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சிறையில் 2-வது நுழைவு வாயில் பகுதிக்கு மினி வேன் வந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரிகள் திடீரென்று வேனை சோதனை செய்தார்கள். இதற்கு சுரேஷ்பாபு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் போலீஸ் அதிகாரிகள் மினிவேனில் சோதனை நடத்தினார்கள்.

6 செல்போன்கள் பறிமுதல்

இந்த நிலையில், மினி வேனின் டிரைவர் இருக்கைக்கு அடியில் சிறிய அட்டை பெட்டி துணியால் சுற்றப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த அட்டை பெட்டியை பிரித்து பார்த்த போது, அதற்குள் 6 செல்போன்கள், 6 சிம் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த செல்போன்கள், சிம் கார்டுகளை சிறையில் உள்ள கைதிகளுக்கு கொடுக்க இறைச்சி வாகனத்தில் சுரேஷ்பாபு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஒப்பந்ததாரர் சுரேஷ்பாபு, அவரிடம் வேலை செய்யும் இம்ரான் பாட்ஷா, ராஜேந்திரா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 6 சிம் கார்டுகள் மற்றும் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேர் மீதும் பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்