ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் முக்கிய பதிவேடுகளை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் முக்கிய பதிவேடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-12-08 22:15 GMT
ஓமலூர்,

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் பணம் வசூலிப்பதாகவும், டாக்டர்கள், செவிலியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி, இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, பூபதிராஜன், கோமதி, தாசில்தார் சாந்தி உள்பட மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்குள்ள டாக்டர்கள், நோயாளிகள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு டாக்டர், சில புரோக்கர்களை வைத்துக் கொண்டு அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் பணம் வசூல் செய்தது, கட்ட பஞ்சாயத்து செய்ததும், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து, மாத்திரைகளை எடுத்து சென்று, அருகில் தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கியதும் தெரியவந்தது.

மேலும் ஒரு செவிலியர் தனது வீட்டு வேலைக்கு மருத்துவமனை ஊழியர்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மீதும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நோயாளிகள் சரமாரி புகார்களை தெரிவித்தனர். இதனிடையே முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும், ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவேடு, மருத்துவ நிதி ஒதுக்கீடு பதிவேடு போன்ற முக்கிய பதிவேடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பதிவேடுகளை ஆய்வு நடத்திய பின்னர் அதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடத்திய சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்