உயர் அதிகாரி விடுமுறை வழங்காததால் மின்வாரிய உதவி பொறியாளர் தற்கொலை - தாய்க்கு திதி கொடுக்க முடியாத விரக்தியில் விபரீத முடிவு

உயர் அதிகாரி விடுமுறை வழங்காததால் மின்வாரிய உதவி பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-12-08 23:00 GMT
பழனி,

பழனியில் உயர் அதிகாரி விடுமுறை வழங்காததால் மின்வாரிய உதவி பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57). இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றினார். இதற் காக பழனி ரெயில்வேபீடர் சாலையில் பெரியாத்தா காலனியில் ஒரு வீட்டில் தனியாக வசித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர், வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அதே பகுதியை சேர்ந்த ஒருவர், தனபாலனை பார்க்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் அவர் கதவை தட்டி, தனபாலனை அழைத்தார்.

ஆனால், நீண்டநேரமாகியும் தனபாலன் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டி பார்த்தார். அப்போது, மின்விசிறியில் தனபாலன் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து பழனி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் தனபாலனின் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனபாலன் வசித்த வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் எழுதிய 2 கடிதங்கள் சிக்கின. அதில் ஒரு கடிதத்தில் தற்கொலைக்கான காரணத்தை எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-

‘அன்புள்ள ‘அம்மா’ நான் உங்களுடைய இறந்த நாளான நாளை (அதாவது இன்று) சொந்த ஊரில் இருந்திருக்க வேண்டும். நீங்கள் இறந்து ஓராண்டு முடிந்த பின்பு கொடுக்க வேண்டிய திதியை கூட கொடுக்க இயலாதவனாக இருக்கிறேன். எனது மேல் அதிகாரி, லீவு நாளில் கூட உங்களுக்கு திதி கொடுக்க விடுமுறை எடுக்க அனுமதி அளிக்கவில்லை.

இதனால், இந்த துயர முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். நான் இறந்தாலும் எனது குடும்பத்தினர் அடுத்தவர்களை பகைத்துக் கொள்ளாமலும், கடன் வாங்காமலும், கொடுக்காமலும் வாழ வேண்டும். நான் இறந்ததும் எனக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதி சடங்குகளையும் என் குடும்பத்தினர் செய்ய வேண்டும். நான் என்றும் எனது அம்மாவின் பிள்ளையாக இருப்பேன். அப்பிராணிகள் தான் எப்போதும் தண்டிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

எனவே, அவர் விடுமுறை கிடைக்காத விரக்தியில் இறந்தது தெரியவந்தது. இது குறித்து பழனி நகர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு திதி கொடுப்பதற்கு விடுமுறை கிடைக்காத விரக்தியில் மின்வாரிய உதவி பொறியாளர் தற்கொலை செய்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்த தனபாலனுக்கு பானு (48) என்ற மனைவியும், கேசவன் (29) என்ற மகனும், ஸ்ரீலேகா (31) என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்