தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,355 வழக்குகளுக்கு ரூ.50½ கோடியில் சமரச தீர்வு

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,355 வழக்குகளுக்கு ரூ.50½ கோடியில் சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2018-12-08 22:43 GMT
திருப்பூர்,

திருப்பூர் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று காலை நடைபெற்றது. திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான அல்லி தலைமை தாங்கினார். திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோகிலா, இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாபுதீன், முதன்மை சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் குழு செயலாளருமான அழகேசன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன ரம்யா, மாஜிஸ்திரேட்டுகள் பழனி, நித்யகலா மற்றும் மாவட்ட கோர்ட்டு மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. அதில், ஈரோடு மாவட்டம் பெரியகள்ளிப்பட்டியை சேர்ந்த பாரதிகண்ணன்(வயது 19) என்பவர் கடந்த 5-8-2017 அன்று பெரியகள்ளிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து அவருக்கு தண்டுவட எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு விபத்து இழப்பீடு கேட்டு அவருடைய குடும்பத்தினர் திருப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் அவருக்கு ரூ.31 லட்சத்து 62 ஆயிரம் விபத்து இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் சமரச தீர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இழப்பீடு தொகை பெறுவதற்கான உத்தரவை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அல்லி, நேற்று பாரதிகண்ணனிடம் வழங்கினார்.

இதுபோல் காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் கோர்ட்டுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 17 அமர்வுகளில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6 ஆயிரத்து 734 பேர் கலந்து கொண்டனர். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், குடும்பநல வழக்குகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 695 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 355 வழக்குகளுக்கு ரூ.50 கோடியே 63 லட்சத்து 20 ஆயிரத்து 884-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.


மேலும் செய்திகள்