திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்கள் கைது; லாரிகள் பறிமுதல்

திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் மணல் கடத்தியவர்களை போலீசார் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-12-09 22:00 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீசார் கானாடுகாத்தான் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினர். இதைப்பார்த்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவரை தேடிவருகின்றனர்.

இதேபோல சிவலங்குடி அருகே சாக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது, அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த குளத்தூர் பகுதியை சேர்ந்த பிரகாசை (வயது 35) கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது தலைமையிலான போலீசார் நேற்று திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமறம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி புதுக்கோட்டையிலிருந்து காளையார்கோவிலுக்கு மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புதுக்கோட்டையைச்சேர்ந்த செந்தில்குமார் (32), காளையார்கோவில் அருகே உள்ள புல்லுக்கோட்டையைச்சேர்ந்த ரஞ்சித்(26) ஆகிய இருவரையும் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் நகர் போலீசாரிடம் ஒப்புடைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்