புதுவை– கடலூர் சாலையில் உள்ள வனப்பகுதியில் பொதுமக்கள் நடைபயணம் செல்லும் திட்டம்; கவர்னர் தொடங்கி வைத்தார்

புதுவை–கடலூர் சாலையில் உள்ள வனப்பகுதியில் 3 கி.மீ. தூரத்திற்கு பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடைபயணம் செல்லும் திட்டத்தை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-09 22:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கவர்னர் கிரண்பெடி கடந்த வாரம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வனத்துறையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்க அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வனத்துறை அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள 23 ஏக்கர் வனப்பகுதிக்குள் கவர்னர் சென்று பார்வையிட்டார். அங்கு இயற்கை சூழலை பொதுமக்கள் பார்க்கும் வகையில் சுமார் 3 கி.மீ. தூரம் பொதுமக்கள் நடைபயணம் செல்லும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

வனத்துறை வளாகத்தையும், வனப்பகுதியையும் தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கவேண்டும். இங்குகண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் கூண்டில் அடைக்கப்பட்டுள்ள பறவைகள், விலங்குகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியம். அத்துடன் கூண்டில் இருக்கும் பறவைகள், விலங்குகள் பெயர்களை அந்த கூண்டின் முன்பு பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் எழுதி வைக்க வேண்டும். வனப்பகுதிகளில் மூலிகை செடிகளை நட வேண்டும்.

குறிப்பாக வேம்பு, கற்றாழை உள்ளிட்ட பல மூலிகைகளை நட ‘‘ஆயுஷ்’’ உதவியையும் பெறலாம். வனத்துறை ஊழியர்களிடையே வாட்ஸ்–அப் குழுவை தொடங்கி அதிகாரிகள், ஊழியர்களை அதில் இணைத்து அலுவலக செய்திகளை பகிர வேண்டும். இந்த குழு வனத்துறை சிறப்பாக செயல்பட பயனுள்ளதாக உதவும். தற்போது நகர்புறத்தில் உள்ள வனப்பகுதியை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் பார்வையிட கோடை காலத்தில் காலை 6 மணி முதல் இரவு 7மணி வரையும், குளிர்காலத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கலாம். ஞாயிறுக்கிழமை கண்டிப்பாக திறந்திருக்க வேண்டும். வனப்பகுதியை பார்வையிட விடுமுறை நாளாக திங்கள்கிழமையை அறிவிக்கலாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்