கடலூரில்: மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-09 22:00 GMT
கடலூர்,


கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளைச் சேர்ந்த, மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொது மாற்றுத்திறனாளிகள் என 310 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கலந்து கொண்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்றாக மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப்பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்த மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அரசின் செலவில் மாநில போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு உடலில் உள்ள ஊனத்தை ஒரு குறையாக எண்ணாமல் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.

மேலும் செய்திகள்