குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனு கொடுக்க வந்த பெண்கள் கலெக்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்கள் கலெக்டர் கணேசை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-10 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து 292 மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மனு கொடுக்க வந்தனர். அப்போது கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கலெக்டர் கணேஷ் காரில் இருந்து இறங்கி செல்லும்போது, அவரை முற்றுகையிட்டு, நாங்கள் தனியார் நிறுவனங்களில் தவணை முறையில் கடன் வாங்கி உள்ளோம். புயல் தாக்கியதில் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால், எங்களால் தற்போது கடன் தவணை தொகையை செலுத்த முடியவில்லை.

கடன் தொகையை வசூல் செய்ய வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி வருகின்றனர். எனவே நீங்கள் நடவடிக்கை எடுத்து மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது 6 மாதம் காலஅவகாசம் வாங்கி தர வேண்டும் எனக்கூறினர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் கணேஷ் கூறுகையில், நீங்கள் வாங்கிய கடனை செலுத்த 6 மாதம் காலஅவகாசம் வழங்க சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதையும் மீறி அவர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால், இதுகுறித்து நீங்கள் போலீஸ் நிலையத்தில புகார் அளிக்கலாம் என்றார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்த கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மின் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் கறம்பக்குடி சுந்தரவடிவேலு கொடுத்த மனுவில், நாங்கள் கறம்பக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறோம். எங்களைபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் மின்வாரியத்தில் பணியாற்றி வருகின்றனர். கஜா புயல் மீட்பு பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். எனவே எங்கள் நிலையை கருத்தில் கொண்டு, எங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனாமுகமது கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

திருக்கட்டளை பொன்னநகர் பகுதியை சேர்ந்த ராஜாமுகமது மொய்தீன் குடும்பத்தினருடன் வந்து கொடுத்த மனுவில், நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். மேலும் நான் டி.வி. பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறேன். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியதில், எனது கடைக்கு பழுதுபார்க்க வந்த டி.வி.கள் பல சேதமடைந்தன. நான் பலரிடம் கடன் வாங்கிதான் கடையை நடத்தி வந்தேன். தற்போது கடையை திறக்கமுடியாததால், அவர்களிடம் நான் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து என்னிடம் கடனை கேட்கின்றனர். இதனால் வீட்டின் உரிமையாளர் நாளை (புதன்கிழமை) வீட்டை காலிசெய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார். எனவே உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுத்து எனக்கு புயல் நிவாரணம் அல்லது வங்கி மூலம் கடன் பெற்றுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்