புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது எச்.ராஜா பேட்டி

புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

Update: 2018-12-10 23:15 GMT
திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வேப்பம்குடியில் பா.ஜ.க. சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட் களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தையும் இணைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்ற கருத்து என்பது ஏற்புடையது அல்ல. அது போன்று எதுவும் நடக்கவில்லை. தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதித்தது ஏற்புடையது அல்ல. இந்துமத கோவிலில் வழி பாட்டு உரிமைக்கு எதிரானது. நீதிமன்றங்கள் இருக் கின்ற சட்டப்படி நிர்வாகம் நடக்கிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது. 5 மாநில தேர்தல் நாளை வெளிவர உள்ளது. அதற்கு பின்னர் எதிர் கட்சிகள் கூட்டம் கூட்ட முடியாது என்பதற்காக தான் அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளனர். 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

தெலுங்கானாவில் பா.ஜ.க. துணையோடு சந்திரசேகரராவ் ஆட்சி அமைப்பது உறுதி. சட்டத்தின்படி திருமாவளவன் இருக்க வேண்டும். அவர் சமுதாய பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரை கூட்டணியில் இருந்து விடுவிப்பதற்கு ஸ்டாலின் தயாராகிவிட்டார். அதனால் தான் பழியை எங்கள் மீது திருமாவளவன் சுமத்துகிறார். பிரதமர் வேட்பாளர் மோடி தான். ஒரு சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். திராவிட இயக்கங்கள் தோன்றிய பிறகுதான் தமிழகத்தில் சாதிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு, ஆணவ படுகொலைகள் என்பது தொடங்கியது. தமிழகத்தில் நடக்கும் ஆவண கொலைகளுக்கு காரணமே திராவிட இயக்கங்கள் தான். எனவே கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். திராவிட இயக்கங்கள் அஸ்தமனத்தில் தான் புதிய தமிழகம் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் எச்.ராஜா அறந்தாங்கியில் புயலால் பாதிக்கப்பட்ட செங்கமாரி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். 

மேலும் செய்திகள்