பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல்: கோஷ்டி மோதலால் போலீஸ் குவிப்பு

பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தலில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2018-12-10 23:45 GMT
ஈரோடு,

ஈரோடு புதுமை காலனியில் மனாருல் ஹுதா மஸ்ஜித், மதரஸா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலின் நிர்வாகிகள் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், துணைச்செயலாளர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

இதனால் ஓட்டு போடுவதற்காக ஏராளமான முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு வந்தனர். தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். அப்போது தேர்தலில் முறைகேடு நடப்பதாக ஒரு தரப்பினர் புகார் கூறினர். இதனால் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இருதரப்பினரிடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டது.

இதன் காரணமாக இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோஷ்டி மோதல் பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் மனோகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்டார்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டார்கள். மேலும் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக் காக குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தேர்தல் நடந்தது. இந்த சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்