புழல் ஜெயிலில் பெண் மாவோயிஸ்டுக்கு திடீர் உடல்நல குறைவு; ஆஸ்பத்திரியில் அனுமதி

புழல் ஜெயிலில் பெண் மாவோயிஸ்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2018-12-10 22:45 GMT

செங்குன்றம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் 2002–ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பயிற்சியில் ஈடுபட்டபோது போலீசார் சுற்றிவளைத்து ஏராளமானோரை கைது செய்தனர். அப்போது பெண் மாவோயிஸ்டு சத்யமேரி என்கிற பத்மா (வயது 47) தலைமறைவானார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. ஜாமீனில் வெளியே வந்த பத்மா கடந்த 2010–ம் ஆண்டு வழக்கில் ஆஜராகாமல் மீண்டும் தலைமறைவானார். இதனை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பத்மா, பூந்தமல்லி கோர்ட்டில் கடந்த 7–ந் தேதி சரண் அடைந்தார். அவரை 19–ந் தேதி வரை கோர்ட்டு காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பத்மாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. ஜெயில் அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் சிகிச்சை பெறும் அறைக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்