சென்னை விமானநிலையத்தில் மலேசியா கடத்த முயன்ற ரூ.22½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்; 5 பேர் சிக்கினர்

சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்றதாக விமானநிலையத்தில் ரூ.22½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-12-10 22:30 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானத்தில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது மலேசியாவிற்கு சுற்றுலா செல்ல குழுவாக அப்துல் மதீன் (வயது 49), ராவுத்தர் நைனா(28), சிக்கந்தர் (40), இப்ராகிம் ஷா(40), தாவூத் அலி(48) ஆகிய 5 பேர் வந்தனர். இவர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள். அதேபோல் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பணத்தையும் கண்டுபிடித்தனர்.

இவ்வாறு 5 பேரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 5 பேரிடமும் இந்த பணம் யாருக்காக கடத்தி செல்லப்படுகிறது?. இவை ஹவாலா பணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்