தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்

புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2018-12-10 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு சார்பில் புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி மண் சட்டியை கையில் ஏந்தி நூதன போராட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து மண் சட்டியுடன் போராட்டம் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தினர். ஆனால் எங்களது உரிமையில் நீங்கள்(போலீசார்) தலையிட வேண்டாம். கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க சென்றனர். உடனே அவர்களிடம் இருந்த மண் சட்டியை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

கஜா புயல் மற்றும் தொடர் மழையால் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் அனைத்து குடும்பத்தினரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சிலர் வீடுகளை இழந்துள்ளனர். அருந்தவபுரம், தோப்புத்தெரு, உக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியை முறையாக செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வீடுகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசு புதிய வீடுகளை கட்டி தர வேண்டும். வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்