கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-12-10 23:45 GMT

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள தியாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 51). பட்டாசு தொழிலாளியான இவர் அந்த கிராமத்தில் தனது 5 சென்ட் பட்டா நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். வருவாய்த் துறை ஆவணங்களில் இந்த நிலத்திற்கு உரிமைதாரர் என இவர் பெயர் இருந்த போதிலும், கிராம நிர்வாக அதிகாரி அடங்கல் பதிவில் அருகில் வசிக்கும் வேறு ஒரு நபரின் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி கிராம நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டும் அடங்கலில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் பட்டாசு தொழிலாளி முருகேசன் தனது பட்டா நிலத்துக்கான அடங்கலில் தனது பெயரை பதிவு செய்ய கோரி கலெக்டர் அலுகவலகத்தில் பல முறை மனுக்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வருவாய்த்துறை ஆவணங்களில் தனது பெயர் உள்ள நிலையில் அடங்கலில் பெயர் மாற்றம் செய்துள்ள கிராம நிர்வாக அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுக்கள் மூலம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சிக்கு கலெக்டர் அலுவலகம் வந்த முருகேசன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த உடனேயே தான் வைத்திருந்த மண்எண்ணை கேனில் இருந்து மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முருகேசனை தடுத்தனர். உடனடியாக அருகில் இருந்த கடைகளில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து அவர் மீது ஊற்றினர்.

இதனை தொடர்ந்து மேல் விசாரணைக்காக போலீசார் அவரை சூலக்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இம்மாதிரியான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தாலும் அதனையும் மீறி இம்மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவதை தவிர்க்க போலீஸ் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்