சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு: வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை

வடமதுரை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-11 22:00 GMT
வடமதுரை, 

வடமதுரை ரெயில்நிலைய சாலை 4-வது வார்டு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஒன்று கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அண்ணா நகர் பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கூட்டுறவு கடன் சங்க இடத்தின் வழியாக செல்லும் பாதையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடன் சங்கத்தின் சார்பாக அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக மண்ணைகொட்டி அதற்கான பணிகளை தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சென்று வர முடியாது நிலை உள்ளது.

எனவே பொதுமக்களுக்கு நடந்து செல்லும் அளவுக்கு பாதைக்கு இடம் ஒதுக்கிவிட்டு மீதமுள்ள இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொள்ள வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அவர்களிடம் சங்க செயலாளர் விஜயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தான் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்