அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா

பெரும்புகளூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-11 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை. நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை என பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள பெரும்புகளூர் கிராமத்தில் புயல் கரையை கடந்து 25 நாட்களாகியும் இதுவரை எந்த அரசு அதிகாரியும் பார்வையிட வரவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, உரிய நிவாரணம் எதுவும் வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஊரக வளர்ச்சித்துறையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகியிடம் கோரிக்கை குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரி உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். பெண்கள் நடத்திய தர்ணா போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்