ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு வழக்கு: இடைக்கால உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும், மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உறுதி

ஆசிரியர் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உறுதி அளித்தனர்.

Update: 2018-12-11 23:15 GMT

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பொது கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெறலாம் என்றும், இடமாறுதலுக்கான காரணத்தை ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் கடந்த 2016–ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 2018–19–ம் கல்வி ஆண்டிற்கான பொது கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை இடமாற்றம் செய்துள்ளனர். இதற்காக லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல கோடிகளை எட்டும்.

ஒரு மாவட்டத்தில் அதிக நாட்கள் பணியாற்றுபவர்கள்தான் இடமாறுதலுக்கு முன்னுரிமை பெற்றவர்கள். 10 ஆண்டுகளாக பிற மாவட்டங்களில் பணியாற்றி, சொந்த மாவட்டங்களுக்கு இடமாறுதல் கிடைக்காமல் ஏராளமான ஆசிரியர்கள் தவிக்கிறார்கள். ஆனால் சில மாதங்கள் வெளியூர்களில் வேலை பார்த்துவிட்டு, லஞ்சம் கொடுத்து சொந்த மாவட்டத்துக்கு மாறுதல் பெற்று பலர் வந்துள்ளனர்.

இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், எந்த பலனும் இல்லை. எனவே இந்த ஆண்டு நடந்த ஆசிரியர்களின் பொது இடமாறுதல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

ஆசிரியர் பொது இடமாறுதலில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இடமாறுதலுக்காக அதிகாரி ஒருவர் தனது செல்போனில் லஞ்சம் கேட்ட ஆடியோ ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் கலந்தாய்வு விவரங்களை தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் தாக்கல் செய்தார். அதில், ‘2018–19–ம் ஆண்டுக்கான கலந்தாய்வில் 11,990 ஆசிரியர்கள் பங்கேற்றனர். சட்டப்படிதான் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது‘ என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிவில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு வருகிற 13–ந்தேதி (நாளை) பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்