லஞ்ச வழக்கில் கைதான சேலம் கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்

லஞ்ச வழக்கில் கைதான சேலம் அரசு போக்கு வரத்து கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2018-12-11 22:30 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலனியை சேர்ந்தவர் நணிக்கவுண்டன் (வயது 46). அரசு பஸ் டிரைவர். இவர் சேலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ரூ.3 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்து இருந்தார்.

இந்த கடனை பெற்றுத்தர நணிக்கவுண்டன், அண்ணா தொழிற்சங்க பேரவை திருச்செங்கோடு கிளை செயலாளரும், கண்டக்டருமான வேலுசாமியை (55) தொடர்பு கொண்டார். அதற்கு வேலுசாமி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத நணிக்கவுண்டன் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

பின்னர் போலீசாரின் அறிவுரையின்படி அவர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை வேலுசாமியிடம் கொடுக்க திருச்செங்கோடு சென்றார். அப்போது வேலுசாமி, பணத்தை ராஜகோபால் என்பவரிடம் கொடுக்குமாறு கூறி உள்ளார். அதன்படி ராஜகோபாலிடம் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர்.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் கண்டக்டர் வேலுசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு உடையதாக கூறப்பட்ட கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரனையும் (54) சேலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கைதான கண்டக்டர் வேலுசாமி, கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரன் ஆகிய இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்று அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் அரவிந்த், கண்டக்டர் வேலுசாமியை பணி இடைநீக்கம் செய்தார். இதேபோல் கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரனை, சேலம் கூட்டுறவு துணை பதிவாளர் சுருளியப்பன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.


மேலும் செய்திகள்