அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-12 23:00 GMT
அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே உள்ள பெருங்காட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்கள் மது குடித்து விட்டு அங்கே அரை நிர்வாணமாக கிடக்கின்றனர். மேலும் சிலர் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் இந்த டாஸ்மாக் கடை சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு முகம் சுழிக்க வைக்கின்றனர். மேலும் அவர்கள் வேறு பாதை வழியாக சுற்றி தாங்கள் செல்கின்ற இடத்திற்கு செல்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளிக்கும், பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதைகண்டித்தும், டாஸ்மாக்கடையை அகற்றக்கோரியும் பெருங்காட்டில், மேல்மங்கலம், குன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்துகுமார் தலைமை தாங்கினார். தங்கராசு, தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி மற்றும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி இன்னும் 4 மாதத்தில் இந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்