சபரிமலைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் பலி 31 பக்தர்கள் காயம்

சபரிமலைக்கு சென்று திரும்பிய போது ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 31 பக்தர்கள் காயமடைந்தனர்.

Update: 2018-12-12 22:15 GMT
விராலிமலை,

ஆந்திரா மாநிலம் வடகட்டப்பா ப.கோத்தப்பள்ளியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஆம்னி பஸ்சில் அய்யப்ப பக்தர்கள் 41 பேர் கொண்ட குழுவினர் கேரள மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு அதே ஆம்னி பஸ்சில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். பஸ்சை ஆந்திர மாநிலம் துர்புகோதாவரி மாவட்டம் ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த வீரபத்ரராவ் (வயது 48) என்பவர் ஓட்டினார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை ஆம்னி பஸ் விராலிமலை அருகே உள்ள தண்ணீர்பந்தல்பட்டி மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டனர். இதில் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி ஆந்திரா மாநிலம் ப.கோத்தப்பள்ளியை சேர்ந்த நாகேஸ்வரராவ் மனைவி சூரியாவதி (50 ) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த ப.கோத்தப்பள்ளியை சேர்ந்த சூர்யகாந்தம் (60), நெறியா (65), கோவிந்தராஜ் (60), ராம்பாபு மகன் வெங்கட சூரிபாபு (26), கங்காதரன் (28), வீரசுப்பிரமணியன் மகன் வெங்கடேஷ் (26) உள்பட 31 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இறந்த சூரியாவதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்