நலவாழ்வு முகாமில் பங்கேற்க கோவில் யானைகள் கோவை பயணம்

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள நலவாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக கோவில் யானைகள் சிறப்பு பூஜை செய்து அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2018-12-13 22:30 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள கோவில்கள், மடங்கள் மற்றும் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு அவற்றுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு அளிக்கப்படுவது வழக்கம். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு யானைகள் நலவாழ்வு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் தினமும் காலை, மாலை யானைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படும். பசுந்தீவனம், சத்துணவு மற்றும் இயற்கை மருந்துகளும் வழங்கப்படும்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் உள்ள தர்மாம்பாள் யானையும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் உள்ள செங்கமலம் யானையும் நலவாழ்வு முகாமில் பங்கேற்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு லாரிகளில் அனுப்பப்பட்டன.

பழனி முருகன் கோவில் யானை கஸ்தூரி நேற்று லாரி மூலம் நலவாழ்வு முகாமுக்கு பயணமானது. யானை கஸ்தூரிக்கு 53 வயது ஆகிறது. முன்னதாக காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு யோக ராமச்சந்திரமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான யானை லட்சுமி நலவாழ்வு முகாமில் கலந்து கொள்கிறது. அந்த யானைக்கு 23 வயது ஆகிறது. யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து அதிகாரிகள் வழி அனுப்பினர். 

மேலும் செய்திகள்