சித்தராமையாவின் வெளிநாட்டு பயணம் பாதியிலேயே ரத்து : பெங்களூரு திரும்பினார்

எஸ்.ஆர்.பட்டீலுக்கு கர்நாடக மேல்-சபை தலைவர் பதவி கிடைக்காததால், சித்தராமையா தனது வெளிநாட்டு பயணத்தை திடீரென பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பெங்களூரு திரும்பினார்.

Update: 2018-12-14 00:13 GMT
பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கடந்த 10-ந் தேதி 6 நாட்கள் பயணமாக மலேசியாவுக்கு சென்றார். அங்கு தனது நண்பர் குடும்பத்தின் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். பின்னர் அவர் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு 15-ந் தேதி(அதாவது நாளை) பெங்களூரு திரும்ப முடிவு செய்திருந்தார்.

அவர் வெளிநாடு செல்லும் முன்பு, மேல்-சபை தலைவர் பதவிக்கு எஸ்.ஆர்.பட்டீலை நியமிக்கும்படி மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் டெல்லியில் உள்ள மேலிட தலைவர்கள் மூலம் மேல்-சபை தலைவர் பதவியை பிரதாப்சந்திரஷெட்டிக்கு பெற்று கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் சித்தராைமயா தனது வெளிநாட்டு பயணத்தை திடீரென பாதியிலேயே ரத்து செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு பெங்களூரு திரும்பினார். அவரை நேற்று நேரில் சந்தித்து பேசிய ஆதரவாளர்கள், மேல்-சபை தலைவர் பதவி எஸ்.ஆர்.பட்டீலுக்கு கிடைக்காதது குறித்து புகார் தெரிவித்தனர்.

எஸ்.ஆர்.பட்டீலுக்கு மேல்-சபை தலைவர் பதவி கிடைக்காததன் மூலம், வட கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்