மார்த்தாண்டத்தில் டீக்கடைக்கு சீல் வைப்பு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மார்த்தாண்டத்தில் பிரச்சினைக்குரிய டீக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2018-12-15 23:00 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகே அதே பகுதியை சேர்ந்த பாலம்மாள் (வயது68) என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். அவர் நகராட்சியிடம் குத்தகை அடிப்படையில் கடை நடத்தி வந்தார். அந்த கடையை காலி செய்யும்படி நகராட்சி சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், கடையை தொடர்ந்து நடத்த கோர்ட்டு மூலம் உத்தரவு பெற்றிருப்பதாக கூறி காலி செய்ய மறுத்தார்.

நேற்று முன்தினம் அந்த கடைக்கு சீல் வைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் அங்கு சென்றனர். ஆனால், தான் கோர்ட்டு உத்தரவு பெற்றிருப்பதாக கூறி, கடைக்கு சீல் வைக்க பாலம்மாள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரும், அதிகாரிகளும் கோர்ட்டு உத்தரவுக்கான உரிய ஆதாரங்களை காட்டுமாறு கூறிவிட்டு சீல் வைக்காமல் திரும்ப சென்றனர்.


இந்தநிலையில், நேற்று காலையில் நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பிரச்சினைக்குரிய அந்த கடைக்கு சென்றனர். மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் சுந்தரலிங்கம், ஜாண் விக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்ததை அறிந்து ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். தொடர்ந்து பாலம்மாள் தரப்பில் கடைக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பையும் மீறி நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்