ஆணவ படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்றக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஆணவ படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்றக்கோரி மயிலாடுதுறையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-15 22:45 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க வேண்டும். சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். மணல் கடத்தலை தடுக்கவும், கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும். வேதாரண்யம் பகுதியில் புயல் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஆதிதிராவிடர்-சிறுபான்மையினர் பாதுகாப்பு கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஈழவளவன் தலைமை தாங்கினார். சாதி ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷேக்அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் முசாகுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் விவேகானந்தன், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் சுப்புமகேசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்