வெளிநாட்டில் மருத்துவ ‘சீட்’ வாங்கி தருவதாக திருச்சி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி

வெளிநாட்டில் மருத்துவ ‘சீட்‘ வாங்கி தருவதாக கல்லூரி பேராசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-15 22:15 GMT
திருச்சி,

திருச்சி ராமலிங்க நகரை சேர்ந்தவர் ராஜா. இவர் புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பு முடித்திருந்தார். மகனை வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படிக்க வைக்க ராஜா விரும்பினார்.

இதற்கிடையில் அதே கல்லூரியில் பணியாற்றும் ஒருவர் மூலம் கொடைக்கானலை சேர்ந்த பிரதீப் அலெக்சாண்டர் என்பவர் ராஜாவிடம் அறிமுகமாகி மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக கூறினார். இதற்கு திருச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன், ஆன்ட்ரூ ஆகியோரும் உறுதி அளித்தனர். இதையடுத்து ராஜா தனது மகன் படிப்பிற்காக ரூ.10 லட்சத்தை 3 பேரிடமும் கொடுத்தார்.

இதையடுத்து மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு இடம் கிடைத்ததற்கான ஆவணங்களை ராஜாவிடம் அவர்கள் கொடுத்தனர். அந்த ஆவணங்களை அவர் பரிசோதித்து பார்த்த போது அது போலியானது என தெரியவந்தது. இதனால் ரூ.10 லட்சத்தை திருப்பி தருமாறு பிரதீப் அலெக்சாண்டர், கார்த்திகேயன், ஆன்ட்ரூ ஆகியோரிடம் ராஜா கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமலும், வெளிநாட்டில் மருத்துவ ‘சீட்‘ வாங்கி தராமலும் மோசடி செய்துவிட்டனர். இது தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூ.10 லட்சம் மோசடி செய்த பிரதீப் அலெக் சாண்டர், கார்த்திகேயன், ஆன்ட்ரூ ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்