எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 89 பேர் கைது

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய சாலை மறியலில் 89 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-15 23:15 GMT
தேனி,

தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி, உத்தமபாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 89 பேரை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பற்றி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறாக பேசியதாகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம் ஆகிய 2 இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

தேனியில் நேரு சிலை சிக்னல் பகுதியில் சாலை மறியல் நடந்தது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் அக்கட்சியினர் மதுரை சாலையில் இருந்து நேரு சிலைக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதில் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொல்.திருமாவளவனை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். எச்.ராஜாவை கைது செய்வதற்கு தமிழக அரசும், போலீஸ் துறையும் பயப்படக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், உத்தமபாளையம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் அருகில் மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். 2 இடங்களிலும் மொத்தம் 89 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்