கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மேகதாது நோக்கி விவசாயிகள் ஊர்வலம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 1-ந் தேதி மேகதாது நோக்கி விவசாயிகள் ஊர்வலம் செல்வதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2018-12-15 23:00 GMT
திருச்சி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்ததை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்திற்குத்தான் நலன் பயக்கும் என்று கர்நாடக அரசு கூறி வருவது மிக மோசடித்தனமான செயல். எனவே, தமிழகத்தை அழிக்கும் நோக்கோடு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.தமிழக விவசாயிகள் மீது அக்கறையோடு கர்நாடக முதல்-மந்திரி பேசுவாரானால், தமிழக எல்லையான ராசிமணலில் காவிரியின் குறுக்கே அணையை கட்டி, கடலில் வீணாக தண்ணீர் கலப்பதை தடுக்க தமிழக அரசுக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதே வேளையில் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து விட்டு, ராசிமணலில் அணை கட்ட மத்திய அரசு வரைவு திட்ட ஆய்வு அறிக்கை தயார் செய்திட அனுமதி அளிக்க வேண்டும்.

எனவே, தமிழக எல்லையான ராசிமணலில் புதிய அணை கட்ட வலியுறுத்தியும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும் வருகிற ஜனவரி 1-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மேகதாது நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் ஊர்வலம் செல்ல முடிவெடுக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்துக்கு துக்க நாள். அரசியல்வாதிகள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள் தங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கஜா புயலால் உயிரிழந்த மக்கள் மற்றும் ‘நெல்’ ஜெயராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்