சாம்ராஜ்நகர் கோவில் விழாவில் சாப்பிட்ட 13 பேர் பலி: பிரசாதத்தில் விஷம் கலந்தது யார்? தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

சுலவாடி கிராமத்தில், கோவில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியான சம்பவத்தில், பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டது உண்மையா? அப்படியானால் பிரசாதத்தில் விஷம் கலந்தது யார்? என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-12-15 23:43 GMT
கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ளது கிச்சுகுத்தி மாரம்மா அம்மன் கோவில்.

இந்த மாரம்மா கோவிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட 12 பேர் பலியானார்கள். 104 பக்தர்கள் உடல்நலக்குறைவால் சாம்ராஜ்நகர், கொள்ளேகால் மற்றும் மைசூருவில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நளினி (வயது 30) என்ற பெண் பலியானார். இதனால் இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் பலியானவர்களின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அதில் ரசாயனம்(விஷம்) கலந்து இருந்தது தெரிய வந்தது.

அதாவது விவசாய நிலங்களுக்கு தெளிக்கப்படும் சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) பிரசாதத்தில் யாரோ கலந்து இருக்கிறார்கள். அதன் காரணமாகவே பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக டாக்டர்கள் அறிக்கை ஒன்றை போலீசாரிடம் தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மைசூருவில் இருந்து மத்திய உணவு பரிசோதனை மைய நிபுணர்கள், மாரம்மா கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை சேகரித்தனர். மேலும் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களையும் சேகரித்தனர். பின்னர் அவற்றை ஆய்வுக்காக கொண்டு சென்றனர். அவர்களுடைய ஆய்வில், பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டு இருப்பது உறுதியாக தெரிந்துவிடும் என்று டாக்டர்கள் கூறினர்.

இதற்கிடையே கோவிலை நிர்வகிக்கும் விவகாரத்தில் இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், அதில் ஒருதரப்பினர்தான் இந்த சதிச்செயலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டினர். மேலும் கோவிலின் பூசாரி தலைமையிலான தரப்பினர்தான் இந்த செயலை செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று கிராம மக்கள் பலர் கூறினர்.

இதற்கிடையே பிரசாதத்தை சாப்பிட்ட பூசாரியின் குழந்தையும் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பூசாரியின் பெயரோ, அவருடைய குழந்தையின் பெயரோ வெளியிடப்படவில்லை.

இதுமட்டுமல்லாமல் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அது செயல்படாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கேமராவை தற்போது போலீசார் கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மேந்திர குமார் மீனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டது உண்மையா? அப்படி இருக்கும் பட்சத்தில் விஷம் கலந்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏற்கனவே பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக சின்னப்பி, மாதேஷ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று மதியம் மந்திரி சி.எஸ்.புட்டராஜு, முன்னாள் மந்திரி என்.மகேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவம் நடந்த மாரம்மா கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கோவில் வளாகத்தை சுற்றிப்பார்த்தனர். பின்னர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கப்பட்ட இடம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்ட இடம், மீதமிருந்த பிரசாதம் கொட்டப்பட்ட இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுடன் போலீசாரும் உடனிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில், இச்சம்பவத்தில் பலியான பிதரஹள்ளியைச் சேர்ந்த சாந்தராஜு, கோபியம்மா, சிவு உள்பட 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் இருந்து அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர்கள், இறந்தவர்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் அவர்கள் உடல்களை எடுத்துக் கொண்டு தங்களுடைய சொந்த ஊரான பிதரஹள்ளி கிராமத்திற்கு சென்றனர். அங்கு உடனடியாக அவர்களுடைய உடல்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, ஒன்றாக வைத்து தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலையில் ஹனூர் போலீசார் மாரம்மா கோவிலில் பிரசாதம் தயாரித்த சமையல்காரர் புட்டசாமியை பிடித்தனர். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக பிடிக்கப்பட்டுள்ள சின்னப்பி என்பவரின் மகன் லோகேசிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்