தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி உறவினர் படுகாயம்

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். உடன் சென்ற உறவினர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-12-16 22:15 GMT
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த குண்டியால்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் ராமதாஸ் (வயது 24) கூலித் தொழிலாளி. இவரும், இவரது உறவினர் கோபி (23) என்பவரும் பர்கூருக்கு நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் தங்களின் சொந்த ஊரான குண்டியால்நத்தம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அங்கிநாயனப்பள்ளி அருகில் சென்ற போது தேசிய நெடுஞ்சாலையில் மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. அந்த நேரம் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மாடு மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்தனர். அதில் காயம் அடைந்த ராமதாஸ் மற்றும் அவரது உறவினர் கோபி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமதாஸ் இறந்தார்.

கோபி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையின் குறுக்கே வந்த மாடும் பலத்த காயம் அடைந்தது. அது சினைமாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், பர்கூர் சுற்று வட்டாரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சிலர் ஆடு, மாடுகளை அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்