மனைவியை கொன்று விவசாயி தற்கொலை முயற்சி நடத்தை சந்தேகத்தால் விபரீதம்

அரியலூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்றுவிட்டு, விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2018-12-16 23:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் அருகே உள்ள சன்னாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவரது மனைவி சுகன்யா(25). இவர்களுக்கு அய்யப்பன்(6), மதுஸ்ரீ(3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் தனக்கு சொந்தமான டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து குடும்பம் நடத்தி வந்தார்.

மேலும் விவசாயமும் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் மணிகண்டன், தனது தம்பி மாரிமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்டு, சன்னாவூரில் உள்ள நமது வயலில் உள்ள சோளக்காட்டில் சுகன்யாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும், இதையடுத்து தானும் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டதாகவும் அழுதவாறு கூறியுள்ளார்.

இதனால் பதற்றம் அடைந்த மாரிமுத்து உடனடியாக அவர் கூறிய இடத்திற்கு சென்றார். மேலும் இதுகுறித்து வெங்கனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சுகன்யா முகத்தில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு, பிணமாக கிடந்தார். அருகே விஷம் குடித்ததில் மணிகண்டன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதனைக்கண்ட போலீசார் உடனடியாக மணிகண்டனை மீட்டு, சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சுகன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கடந்த சில மாதங்களாகவே மணிகண்டன், சுகன்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு தாக்கி வந்தார். இது தொடர்பாக வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்படுவதும், அப்போது போலீசார் கணவன், மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் மணிகண்டனுக்கும், சுகன்யாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று மதியம் சுகன்யாவை, மணிகண்டன் சமாதானம் செய்து, அருகே உள்ள தனது வயலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அவர்களுடன் குழந்தை அய்யப்பனும், மதுஸ்ரீயும் சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளை தூரத்தில் நிறுத்தி விட்டு, மனைவியை மட்டும் மணிகண்டன் சோளக்காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், சுகன்யாவின் கழுத்தை கையால் நெரித்து கொலை செய்தார். பின்னர், போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் கையோடு கொண்டு சென்றிருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மேற்கண்ட தகவல் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனின் செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர். மனைவியை கொலை செய்து விட்டு, கணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்