நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது திருநாவுக்கரசர் பேட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2018-12-17 23:15 GMT
நாகர்கோவில்,

இளைஞர் காங்கிரஸ் சார்பில் குமரி முதல் காஷ்மீர் வரையிலான ரதயாத்திரை நேற்று நாகர்கோவிலில் இருந்து தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரதயாத்திரையாக இந்தியா முழுவதும் செல்ல இருக்கிறார். அந்த ரதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக வந்துள்ளேன். நாளை (அதாவது இன்று) டெல்லியில் காங்கிரஸ் அறக்கட்டளை கூட்டம் நடக்கிறது. அதற்காக டெல்லி செல்ல இருக்கிறேன்.  

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் கலைஞரின் திரு உருவ சிலை திறப்புவிழா சிறப்பாக நடந்தது. தியாக தலைவியான அன்னை சோனியாகாந்தி அதில் பங்கேற்று சிலையை திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசும்போது அடுத்த தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என முன்மொழிந்து, அதற்கு தி.மு.க. துணைநிற்கும் என்று கூறினார். அதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்தியில் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதைப்போல, தமிழகத்தில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஊழல் அரசும் அகற்றப்பட வேண்டும். ஏன் என்றால் இது பா.ஜனதாவின் பினாமி அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி அகற்றப்பட்டு மத்தியில் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராகவும் வரக்கூடிய விதத்தில் இந்த கூட்டணி ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படும். அதற்கான அஸ்திவாரத்தை நேற்றைய விழா ஏற்படுத்தி இருக்கிறது.

முதலில் கமல்ஹாசனை கூட்டணியில் இணைப்பீர்களா என்பது குறித்து கேட்டீர்கள், இப்போது ரஜினி குறித்து கேட்கிறீர்கள். கூட்டணி ஏற்கனவே 8, 9 கட்சிகளோடு இருக்கிறது. மத்தியிலே காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க. என்ற கூட்டணியை, தலைமைகளை ஏற்றுக்கொண்டு எந்த கட்சியை சேர்ந்தவர்கள் வந்தாலும் சேர்த்துக்கொள்வதில் தவறு ஒன்றும் கிடையாது. உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாதது மிகவும் கண்டனத்துக்குரியது.

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

கஜா புயலில் 70 பேருக்கு மேல் இறந்துள்ளனர். ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. எதை மோடி பார்க்க வந்தார். தமிழிசை சவுந்தரராஜன் எதை நாகரிகம் இல்லை, யாருக்கு இல்லை என கூறுகிறார். தமிழகத்தை மாற்றந்தாய் மனப்பன்மையுடன் பா.ஜனதா நடத்திக்கொண்டிருக்கிறது. கஜா புயல் பாதிப்புக்கு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.300 கோடி கொடுத்திருக்கிறார்கள். சிலை திறக்க ரூ.3 ஆயிரம் கோடி செலவிடுகிறார்கள், 12 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ரூ.300 கோடி கொடுத்திருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்.

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும், கூட்டணி எதிர்காலமும் பிரகாசமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதுதான் எங்களது கருத்து.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

முன்னதாக கார் மூலம் நாகர்கோவில் வந்த திருநாவுக்கரசருக்கு நகர எல்லையான ஒழுகினசேரியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்