பாலித்தீன் பைகள் விற்கும் கடைகளுக்கு அபராதம் - கலெக்டர் உத்தரவு

பாலித்தீன் பைகள் விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-12-17 22:45 GMT
திண்டுக்கல், 

தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி முதல் பாலித்தீன் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பாலித்தீன் பைகளுக்கு பதிலாக துணிப்பை, காகித உறைகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் கடந்த 2 மாதத்துக்கு முன்பே பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்டன.

மேலும் அரசு அலுவலகங் களுக்கு, பொதுமக்களும் பாலித்தீன் பைகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் சிவக்குமார், மாநகராட்சி நல அலுவலர் அனிதா, சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டம் முழுவதும் பாலித்தீன் பைகள் ஒழிப்பில் அனைத்து துறை அலுவலர் களும் தீவிரமாக செயல்பட வேண்டும். பாலித்தீன் பை களை தவிர்க்கும்படி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதோடு பாலித்தீன் பைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். திண்டுக்கல்லை பாலித்தீன் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்