வாகனம் மோதி புதுமாப்பிள்ளை சாவு டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

சிறுகனூர் அருகே வாகனம் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-17 23:00 GMT
சமயபுரம்,

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் பகுதியை சேர்ந்தவர் சன்னாசி மகன் மூர்த்தி (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 7 மாதமாகிறது. இவரது மனைவி அங்கம்மாள்(30) 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். மூர்த்தி, நேற்று முன்தினம் இரவு சிறுகனூரில் இருந்து குமுளூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள சமத்துவபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தச்சங்குறிச்சியில் செயல்படும் டாஸ்மாக் மதுபானகடையில் இரவு பகல் பாராமல் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்து வருவதாகவும், இதன் காரணமாக இளைஞர்கள், கூலித்தொழிலாளர்கள் என ஏராளமானோர் அங்கு சென்று மது அருந்துவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு இதுபோன்று சாலை விபத்துகள் ஏற்பட்டு வருவதால் இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் மேலாளர், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரிடம் மனு கொடுத்தும் டாஸ்மாக் மதுபானக்கடை வேறு இடத்துக்கு மாற்றப்படவில்லை.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனே வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் நேற்று காலை தச்சங்குறிச்சியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர், இன்ஸ்பெக்டர்கள் மதன்(சமயபுரம்), முத்துக்குமார்(லால்குடி) மற்றும் சிறுகனூர் போலீசார், லால்குடி தாசில்தார் சத்தியபால கங்காதரன் உள்பட பலர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்டதாக 68 பெண்கள் உள்பட 116 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சிறுகனூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்