புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2018-12-17 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போது விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 268 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் ஆவின் விற்பனை மையம் அமைப்பதற்கான முன் வைப்பு நிதியுதவி தொகைக்கான காசோலைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கணேஷ் வழங்கினார். கூட்டத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி பரமேஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நைனாமுகமது தலைமையில், பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டையில் உள்ள பல்லவன் குளம் கஜாபுயலின்போது பெய்த மழையால் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த குளத்தில் இருந்து தற்போது வரை தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் பூ மற்றும் காய்கறி மார்க்கெட் வழியாக செல்கிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தண்ணீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வாழமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை பார்வையிட இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் வரவில்லை. எனவே கலெக்டர் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட எங்கள் கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கந்தர்வகோட்டை தாலுகா நெய்புகை உரியம்பட்டி, ஒத்தவீடு, ஆசாரி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பகுதிநேர அங்காடி அமைத்துத்தர வேண்டும் என கூறியிருந்தனர்.

பொன்னமராவதி தாலுகா அரசமலை வாழைக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடந்து உள்ளது. எங்கள் பகுதியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டு, விடுபட்ட வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

குளத்தூர் தாலுகா தென்னதிரையன்பட்டி, ஆலங்குடிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ஜெகதாப்பட்டினம் கம்மாக்கரை கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால் கொடுத்த மனுவில், எங்கள் சங்கத்தில் சுமார் 152 மீனவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். எங்கள் சங்கத்தில் உள்ள மீனவர்கள் அனைவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுயஉதவிக்குழு பெண்கள், புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு குழு மூலம் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது கடனை செலுத்த 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறி மனு அளித்தனர். 

மேலும் செய்திகள்