உடலில் தானாக தீப்பற்றி எரிந்த குழந்தையின் பெற்றோர் அரசு உதவி கேட்டு மனு

அரசு உதவி கேட்டு உடலில் தானாக தீப்பற்றி எரிந்த குழந்தையின் பெற்றோர், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-12-17 22:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியனிடம் வானூர் தாலுகா டி.பரங்கனி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் தனது மனைவி ராஜேஸ்வரி, மகன் ராகுல் ஆகியோருடன் வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் ராகுல் பிறந்து 9 நாளில் அதாவது கடந்த 22.5.13 அன்று உடலில் தானாக தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அப்போதைய மாவட்ட கலெக்டரின் பரிந்துரைப்படி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் ராகுலை சேர்த்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு உடலில் தானாக தீப்பற்றி எரிவது குறைந்து குணமடைந்தான்.

அதன் பிறகு எங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜெயராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினோம். அந்த குழந்தை பிறந்த சில நாட்களில் உடலில் தானாக தீப்பற்றி எரிந்தது. உடனே அந்த குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தது.

தற்போது நாங்கள் நெடிமோழியனூரில் வசித்து வருகிறோம். எங்கள் மகன் ராகுலை அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்து 1-ம் வகுப்பு படிக்க வைத்து வருகிறோம். எங்களது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளதால் நாங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டதன்பேரில் அவர், எங்கள் குழந்தைக்கு உதவித்தொகை அளிப்பதாகவும் மற்றும் எங்களுக்கு அரசு தொகுப்பு வீடு, 3 சென்டில் இலவச வீட்டுமனைப்பட்டா தருவதாக கூறினார். ஆனால் இதுநாள் வரையிலும் அரசு உதவி எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே தாங்கள் இதில் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு அரசு உதவி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்