புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் நாகூர் அருகே நடந்தது

நாகூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-18 22:45 GMT
நாகூர்,

நாகூர் அருகே சன்னமங்கலம் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் பனங்குடி கிராமமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கிராம பொது நல சங்கத்தின் பொருளாளர் உமாநாத் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் தங்கவேல், சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவன ஒப்பந்த தொழிலாளர் ரணதிவே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கஜா புயலுக்கு பிறகு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் பனங்குடி கிராமமக்களுக்கு நிவாரணம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், தமிழக அரசை கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 100 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து, கிராம மக்கள் கூறுகையில், கடந்த 1-ந்தேதி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் புயல் நிவாரணம் வழங்கவில்லை என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது நிறுவன மேலாளர் அனந்த நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது உரிய நிவாரணம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். ஆனால் அதிகாரி உறுதி அளித்தப்படி நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. புயல் நிவாரணம் வழங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்