பெண்ணாடத்தில் தீ விபத்து சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் படுகாயம்

பெண்ணாடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2018-12-18 22:15 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் புத்தர் தெருவில் வசிப்பவர் பெரியசாமி மகன் ரவி (வயசு 50). இவர் விழாக்களுக்கு பாத்திரங்கள், நாற்காலிகள் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டின் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் பாத்திரங்கள், நாற்காலிகள் வைத்திருந்தார். மேலும் அந்த கட்டிடத்தில் 2 சிலிண்டர்களும் வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ரவி, பாத்திரங்கள் வைத்திருந்த வீட்டில் இருந்த கியாஸ் அடுப்பில் வெந்நீர் வைத்து விட்டு, தீயை அணைக்காமல் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த 2 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ரவி மற்றும் மாயவன் மகன் அசோக்குமார்(25), கலியபெருமாள் மகன் பரமசிவம்(35), நடராஜன் மகன் பழனிவேல்(27), ராமலிங்கம் மகன் சிவபாலன்(35), காதர் பாஷா மகன் சம்சுதீன்(40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சண்முகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்