பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் ராப்பத்து உற்சவம் தொடக்கம்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் ராப்பத்து உற்சவம் தொடங்கப்பட்டு, வெள்ளிகருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

Update: 2018-12-19 23:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. இரவில் நம்பெருமாள் உற்சவ சிலை வண்ணமலர்களால் அலங்கரித்து வெள்ளி கருட வாகன சப்பரத்தில் வைக்கப்பட்டு வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தேரோடும் வீதிகளில் சுவாமி வீதிஉலா நடந்தது.

இதையடுத்து நேற்று காலை துவாதசி ஆராதனை நடந்தது. துவாதசி ஆராதனையையொட்டி உற்சவ பெருமாள் ஐந்துதலை நாக வாகனத்தில் வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏகாதசி விரதமிருந்த வைஷ்ணவர்கள், பெருமாள் பக்தர்கள் நம்பெருமாளை வழிபட்டு விரதத்தை முடித்தனர்.

ராப்பத்து உற்சவம் வருகிற 27-ந் தேதி நிறைவு அடைகிறது. அன்றைய தினம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஆழ்வார் மோட்ச நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே அக்ரஹாரவீதிக்கு வந்து அங்கிருந்து கோவில் முன்புறம் உள்ள ஆஞ்சநேயர் கம்பத்தை 3 முறை வலம் வந்து மீண்டும் சொர்க்கவாசல் வழியாக கோவிலை அடைகிறார். அங்கு ஆழ்வார் மோட்சத்திற்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

வருகிற 27-ந் தேதி வரை கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள சொர்க்கவாசல் திறந்திருக்கும். ராப்பத்து உற்சவத்தை முன்னிட்டு 10 நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக சொர்க்கவாசல் திறந்து வைக்கப்படுகிறது. ஆழ்வார் மோட்ச உற்சவத்திற்கு பிறகு சொர்க்கவாசல் அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாக அலுவலர் மணி தெரிவித்தார்.

இதேபோல் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள வரதராஜ கம்ப பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவத்தை யொட்டி சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் வரதராஜ கம்ப பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வரதராஜ கம்ப பெருமாள் வைக்கப்பட்டு வீதிஉலா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்