ஆற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கோரி துணை கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகை

சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் மணல் எடுக்க அனுமதிக்கக்கோரி வில்லியனூரில் உள்ள துணை கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-12-20 22:11 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ள புதுச்சேரி அரசு தடை விதித்து உள்ளது. இதை மீறி மணல் அள்ளுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மணல் அள்ள பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத்தை, மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று காலை மாட்டு வண்டிகளுடன் வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஏ.ஐ. டி.யு.சி. மாநில செயலாளர் சேது செல்வம், மாநில தலைவர் அர்ஜுனன், பொருளாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் குறைந்த கட்டணத்தில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும், மணல் அள்ளுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாட்டு வண்டி தொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த முற்றுகை போராட்டம் பற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து துணை கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் துணை கலெக்டர் உதயக்குமாரை சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து விளக்கினார்கள். மேலும் அவரிடம் மனுவும் அளித்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த துணை கலெக்டர், இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் சந்தித்து பேசும்படி ஆலோசனை கூறினார். மேலும் முதல்-அமைச்சரை இன்று (வெள்ளிக்கிழமை) காலை சந்தித்து பேச உரிய அனுமதியையும் அவர் பெற்றுக்கொடுத்தார்.

மேலும் செய்திகள்