எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 4 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்து 4 மாதங்கள் ஆன குழந்தைக்கு டாக்டர்கள் நவீன இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

Update: 2018-12-21 23:15 GMT
சென்னை,

விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 30). இவரது மனைவி ஜெயந்தி(21). இவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் எடை மிகக் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில் அந்த குழந்தை மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில், அந்த குழந்தையை டாக்டர் ஜி.கே.ஜெய்கரன் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தைக்கு இருதய ரத்தக் குழாயில் தொற்று பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்த வகை தொற்று 10 ஆயிரத்தில் 1 குழந்தைக்கு மட்டுமே ஏற்படும் நோயாகும். இதையடுத்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம்(நவம்பர்) 26-ந் தேதி செல்வராஜ்-ஜெயந்தி தம்பதியின் ஆண்குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு, குழந்தை கண்காணிப்பில் வைக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை குறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர் கூறியதாவது:-

குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கும்போது சில பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், இருதய ரத்த குழாயில் நோய் தொற்று ஏற்படுவது மிக அரிதான ஒன்று. இருப்பினும், சவால் நிறைந்த அறுவை சிகிச்சையை அக்குழந்தைக்கு வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறோம். குழந்தை மிக நலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்