எஸ்.பி.பட்டினம் அருகே ஆட்டோவில் கடத்தி வந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல் - பெண் உள்பட 4 பேர் கைது

எஸ்.பி.பட்டினம் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-23 22:00 GMT
தொண்டி,

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் சோதனைச் சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேசுவரி, சப்-இன்ஸ்பெக்டர் சிலைமணி ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒரு சாக்கு மூடையில் 30 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கஞ்சா மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதில் வந்த கஞ்சா வியாபாரி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த ராணி என்ற தனலெட்சுமி (வயது 45), கனகசபை நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாத்தையா (48), தொண்டி புதுக்குடியை சேர்ந்த முருகானந்தம் (37), துரைப்பாண்டி என்ற கார்த்திக் கிசாலி (24) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் ராமநாதபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் தொண்டி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தஞ்சாவூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கும்பல் அடிக்கடி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதன் பின்னணியில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்