மத்துருட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

மத்துருட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2018-12-24 23:00 GMT
நாமக்கல், 

ராசிபுரம் தாலுகா மத்துருட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கணவாய்மேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

மத்துருட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கணவாய்மேடு பகுதியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் மின்கம்பம் நடப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக தெருவிளக்கு போடவில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வீதியில் நடப்பதற்கே முடியவில்லை. அதுவும் எங்கள் கிராமம் மலைப்பகுதியை ஒட்டி இருப்பதால், விஷ ஜந்துகள் தெருவுக்குள் வருகின்றன. ஒரு சிறுவன் பாம்பு கடித்து இறந்தே விட்டான். எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்.


மேலும் எங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடாமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்து உள்ளனர். இதனால் நாங்கள் குடிநீர் எடுப்பதற்கு சிரமம் அடைந்து வருகிறோம். மேலும் நாங்கள் பயன்படுத்தி வரும் மயானம் நான்கு புறமும் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்