ஊத்துக்கோட்டையில் 210 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்

ஊத்துக்கோட்டையில் 210 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

Update: 2018-12-24 22:30 GMT
ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தாசில்தார் இளங்கோவன் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 210 பேருக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். மேலும் 25 பேருக்கு ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-
மாநிலம் முழுவதும் புதிதாக 1 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இத்திட்டத்தின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமானோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க உத்தேசித்து இருக்கிறோம்.

அதன்படி தற்போது ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைகளை 210 பேருக்கு வழங்கினோம். மாநிலம் முழுவதும் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் மக்காமல் அப்படியே தேங்கி விடுவதால் மழை நீர் பூமிக்கு அடியில் செல்லாமல் கடலுக்கு சென்று விடுகிறது. இதனை கருத்தில்கொண்டு உன்னத நோக்கத்தோடு தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பு முறை அமுல்படுத்த உள்ளது.

இதற்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் மற்றும் துணி பைகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், துயர் துடைப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், தலைமை எழுத்தர் ரவி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்